Monday, March 15, 2010

பயணத்தின் நிழல்

வசந்தத்தின் வாசலில்

ஒரு இலையுதிர் கால மரமாய்

சூறாவளிக்குள் சிக்கிய


அந்திம கால பறவையின் இறகாய்


போர்களத்தின் விளிம்பில் எதிரியிடம்


அகப்பட்ட ஒரு போர்வீரனாய்


ஆக்கிரமிப்பு இராணுவத்திடம்


சிக்குண்டு கசக்கி எறியப்பட்ட


அபலை பண்ணின் உடலாய்


வாழ்வின் நிர்பந்தத்தால்


மென்று உமிழப்பட்ட எச்சிலின்


உணர்ச்சியுடன் பனியிரவின் தனிமை பயணம்..........!



வண்டி நின்ற ஓசை கேட்டு


எனது தூக்கத்தின் மரண அறிக்கையை


குளிர்ந்த பனிகாற்று என் காதில் முனுமுனுத்தது....!



பேருந்தை விட்டு இறங்கிய என்


முகத்தில் அந்த இடத்தின்


பெயர்பலகை ஓங்கி அறைந்தது .......!



எனது உதடுகள் கொட்டாம்பட்டி என்பதற்குள்


எனக்குள் இருந்து எகிறி குதித்து


ஓட தொடங்கிய இதயத்தை


விரட்டி கொண்டு ஓடி தோற்று போனேன் .......!



என் முன்னே சென்ற என்னிதயம்


அங்கே சுவிங்கம் பாட்டிலின் அருகே


சிதைந்து சிதறி கிடந்தது ....!


சுவிங்கதோடு சேர்த்து


எனது இதயத்தையும்


எடுத்து போட்டு கொண்டேன்


என்றோ அவள் கேட்டதற்காக


ஒவ்வொரு பயணத்திலும்


கொட்டாம்பட்டியில் சுவிங்கம் வாங்கி கொண்டிருக்கிறேன் ....!


அந்த நொடி எனை தீண்டிய


தென்றலின் பின்புலத்தில்


அவள் வாசனையை தேடினேன் ....!


எனையறியாமல்


எனது கால்கள் இரண்டும்


முன்பொரு பனியிரவு


அவள் நின்றிருந்த புளியமரத்தை நோக்கி நடந்தன ........!


எனைபோலவே அந்த புளியமரமும்


வசந்தத்தை உதறி ஏறிந்துவிட்டு


காய்ந்த கிளைகளுடன் கருகி போய்நின்றது...!


உணர்வுகளையும் ,உறவுகளையும்


வாழ்வின் சுழற்சியில் காவு கொடுத்து விட்டு


உன் நினைவுகளை மட்டும்


நெஞ்சில் சுமந்து நிற்கும்


எனது தனிமையின் வெம்மை


உனது கண்களின் குளிர்ச்சியில்


தான்மரணம் அள்ளும் ...!


என்னவளே ..!


அதுவரை உனது நினைவுகளும்


நீ கேட்ட சுவிங்கமும்


இந்த மொட்டை புளியமரமும்தான்


உன்னுடான என்னுடைய


பயணத்தின் நிழலாய்


என்னிடம் மிச்சமிருப்பவை ...........!



Sunday, March 7, 2010

முதல் சுவாசம்



முக்கடலின் சங்கமதிலே
அலைகள் பேசும் கடல் நடுவினிலே
உன் விரல் தொட்டு
என் இதழ் பதித்து
நான் கொண்ட நேசம் பேசிவிட ஆசை ...!
உன் நினைவுகளிடம் அடிமையான
என் உணர்வுகளின் கருவை
நான் பிரசவிக்கும் காலமெது

நாலிரண்டு ஆண்டுகளாய் என்காதல்
கருவறையில் நான் சிதைத்து வைத்த
சிசுவை கல்லறையின் வாசலிலே
பெற்றெடுக்கும் தருணத்துக்காய்
விழியிரண்டில் நீர் சுமந்து
வலிகளின் சுமைதாங்கியாய் நிற்கின்றேன் ....!
உன் வரவை எதிர்நோக்கி ...?

அலைகளில் சிக்கிய கிளிஞ்சல்களை போல
உன் நினைவுகளிடம் சிக்கிய
என் சுவாச காத்திருப்பு
வெண்பனியாய் உனை தீண்டலையோ ..!
என் நேசம் சொல்லலையோ ....?




தொலைதூர நண்பனிடம்

என்னுடைய மரணம் வாங்கி

நள்ளிரவின் விசும்பலோடு

உள்மனம் அறியாமல்

உன்னிரு கண்கள் சிந்தும்

இருதுளி உப்புநீர் கவிதையில் தானடி

என் காதல் சிசுவுக்கான முதல்சுவாசம் காத்திருக்கிறது .....!!!